காமிரா கண்கள்

க்ளிக் சமையல் - ஷர்மிலி

Staff Writer

எம்.சி.ஏ. படித்துவிட்டு சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்த ஷர்மிலி ஜெயப்ரகாஷ் கருவுற்ற சமயம் வீட்டில் இருந்தபோது தோன்றிய யோசனை, இன்று மிகப்பெரிதாக வளர்ந்து பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது: அது  சமையல் குறிப்புகள் எழுதுவது. இணைய தளம் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். அவற்றை வீட்டிலேயே சமைத்துப் பார்த்தவர் அவற்றைப் படங்களும் எடுக்க ஆரம்பித்தார். ஃபுட் போட்டோகிராபி, குக்கிங்- என இரண்டுக்குமாக அவரது இணைய தளம் வளர்ந்தது. குழந்தையைப் பார்ப்பதற்காக வேலையையும் விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தவர் தனக்குத் தோன்றிய போதெல்லாம் உணவு வகைகளை சமைத்து  அவற்றைப் படம் எடுத்து இணையத்தில் ஏற்றிவந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த இணையதளம் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக வருமானமும் வர ஆரம்பித்துவிட்டது.

“என் கணவருக்கு வேலை கோவைக்கு மாறுதலான பின்னர்  சொந்த ஊரான கோவைக்கே வந்துவிட்டோம். இங்கிருந்து என் விருப்பப்படி வீட்டிலிருந்தே இணையதளத்தில் பணிகளைத் தொடர்ந்தேன். காலையில் உணவு வகையைச் சமைத்து அதை அழகாகப் படம் எடுத்து இணையத்தில் ஏற்றுவேன். பழைய ஐடி வேலையில் இருந்த டென்ஷன் இதில் கிடையாது. ரசித்து ரசித்து செய்யலாம். அத்துடன் நன்றாக சமைத்தால்தான் படமும் நன்றாக வரும். எல்லா வகையிலான உணவு வகைகளையும் சமைப்பேன்.” என்கிறார்.

இப்போது அவரது இணையதளமான sharmispassions.com க்கு தினமும் 30,000-40,000 பேர் வருகை புரிகிறார்களாம். பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்கள். எப்படி  தானே சமையல் செய்யக் கற்றுக்கொண்டாரோ அதுபோல் நிக்கான் டி3100 காமிரா மூலம் தானே படமெடுக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். இதுவரை சுமார் 800 ரெசிப்பிகளையும் அதற்கான படங்களையும் பதிவேற்றி உள்ளார்.

தான் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ரெசிப்பிகளை நூலாக வெளியிடும் திட்டம் இவருக்கு இருக்கிறது. ரெஸ்டாரண்டுகளில் உணவருந்தச் செல்கையில் அவற்றைப் படம் எடுத்துவந்து விமர்சனங்கள் எழுத, இப்போது பல உணவகங்கள் தங்கள் உணவகத்துக்கு வந்து  விமர்சனம் எழுதுமாறும் கேட்க ஆரம்பித்துள்ளனவாம்! பல நிறுவனங்கள் தங்கள் புதிய உணவுப் பொருட்களையும் இவருக்கு அனுப்பி கருத்துக்கேட்க, விமர்சிக்கச் சொல்லிக் கேட்கவும் ஆரம்பித்துள்ளன. ‘நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. என் தளத்தில் வெளியிடும் விளம்பரங்களிலும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் ஷர்மிலி.

மார்ச், 2014.